search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சிறந்த எலக்ட்ரானிக் சேவை"

    சிறந்த எலக்ட்ரானிக் சேவைக்காக கேரள போலீஸ் செயலிக்கு உலக அரசு உச்சி மாநாட்டில் அமீரக துணை பிரதமர் மேதகு ஷேக் மன்சூர் பின் ஜாயித் அல் நஹ்யான் விருதை வழங்கினார். #KeralaPolice #TrafficGuruApp #MobileApplication
    துபாய் மதினத் ஜுமைராவில் 3 நாட்கள் நடந்த உலக அரசு உச்சி மாநாடு நேற்று நிறைவடைந்தது. மாநாட்டில் 140 நாடுகளைச் சேர்ந்த 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசுப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

    இதில் அரசுத்துறைகளின் எதிர்காலம் குறித்து பல்வேறு சொற்பொழிவுகளும், விவாதங்களும் நடந்தது. 600-க்கும் மேற்பட்டோர் பங்கேற்று சிறப்புச் சொற்பொழிவு ஆற்றினார்கள்.

    அமீரக துணை பிரதமரும், உள்துறை மந்திரியுமான மேதகு ஷேக் சைப் பின் ஜாயித் அல் நஹ்யான் நேற்று நடந்த இறுதிநாள் நிகழ்ச்சியில் ‘வெற்றிப் பயணம்’ என்ற தலைப்பில் உரை ஆற்றினார்.

    அப்போது அவர் பேசும்போது, ‘‘2007-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை அமீரகம் சமூகத்துக்கு பயனளிக்கும் வகையில் 50 திட்டங்களை அறிவித்தது. இதன் மூலம் உலக நாடுகளில் அமீரகம் முதலிடத்தை பெற்றுள்ளது. துபாய் நகரின் மறைந்த ஆட்சியாளர் மேதகு ஷேக் ராஷித் சிறப்பான எதிர்காலத்தை அடிப்படையாக கொண்டு ராஷித் துறைமுகத்தை ஏற்படுத்தினார். இன்று இந்த துறைமுகம் உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள 80 துறைமுகங்களை கையாண்டு வருகிறது’’ என குறிப்பிட்டார்.

    அமீரக பருவநிலை மாறுபாடு மற்றும் சுற்றுச்சூழல் துறை மந்திரி டாக்டர் தானி பின் அகமது அல் ஜயூதி பேசும்போது, “கடல்களை நாம் பாதுகாக்க வேண்டும். கடல்களின் மூலம் உலகில் 10 கோடி மக்களுக்கு தேவையான வாழ்வாதாரம் கிடைத்து வருகிறது” என்றார்.

    அமீரக கலாசாரம் மற்றும் அறிவு மேம்பாட்டுத் துறைக்கான மந்திரி நூரா பிந்த் முகம்மது அல் காபி, நமது கலை மற்றும் கலாசாரத்தை பாதுகாக்க எந்த வகையான தொழில்நுட்பத்தை பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து பேசினார்.

    மாநாட்டில், சிறந்த எலக்ட்ரானிக் சேவைக்காக கேரள போலீசின் ‘டிராபிக் குரு’ என்ற செயலிக்கு அமீரக துணை பிரதமரும், ஜனாதிபதி விவகாரத்துறை மந்திரியுமான மேதகு ஷேக் மன்சூர் பின் ஜாயித் அல் நஹ்யான் விருது வழங்கி கவுரவித்தார். மேலும் அரசுத்துறைகளின் பல்வேறு சிறப்பான சேவைகளுக்கும் விருது வழங்கப்பட்டது. இதில் கலந்து கொண்ட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைவர்கள், அதிகாரிகளுடன் அமீரக அரசு பல்வேறு ஒப்பந்தங்களை செய்துள்ளது.

    இந்த மாநாட்டில் துபாய் ஆட்சியாளரும், அமீரக துணை அதிபரும், பிரதமருமான மேதகு ஷேக் முகம்மது பின் ராஷித் அல் மக்தூம், அபுதாபி பட்டத்து இளவரசரின் மகள் ஷேக்கா மரியம் பிந்த் முகம்மது பின் ஜாயித் அல் நஹ்யான் மற்றும் மந்திரிகள், பல்வேறு நாடுகளின் தலைவர்கள், அரசு உயர் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். #KeralaPolice #TrafficGuruApp #MobileApplication
    ×